ஆக்காட்டி ஆக்காட்டி -நீ

புதுக்கோட்டையால் பிரபலமான  மக்களிசை பாடல் 


ஆக்காட்டி ஆக்காட்டி -நீ
எங்கெங்கே முட்டையிட்டே?

நான் கல்லைத் துளைச்சு
கருமலையில் முட்டையிட்டேன்

நான் இட்டது நாலு முட்டை
பொறிச்சது மூனு குஞ்சு

அந்த மூனு குஞ்சுலே
மூத்தகுஞ்சக்கிரை தேடி
மூனு மலை சுத்தி வந்தேன்.

நடுக்குஞ்சுக்கிரை தேடி
நாலுமலை சுத்திவந்தேன்

இளைய குஞ்சிக்கிரை தேடப் போகையிலே

அந்தக் கானான் குறத்தி மகன்
கண்டிருந்து கண்ணி போட்டான்
என் காலிரண்டும் கண்ணிக்குள்ளே ரெக்கை ரெண்டும் மாரடிக்க

நான் அழுதகண்ணீர் ஆறாப்பெருகி
ஆனை குளிப்பாட்ட

குளமாய் பெருகி
குருதை குளிப்பாட்ட

ஏரிபெருகி
எருது குளிப்பாட்ட

நான் பெத்த மக்கா- உங்களைப் பாதியிலே விட்டு இப்பப்
பரலோகம் போறேனே, போறேனே....

ஏழைக் குருவியென
ஏங்கியழக் கூடாது

கத்தும் குருவியெனக்
கதறியழக் கூடாது

வலையென்ன பெருஞ்சுமையா

அதையறுக்க வழிகளும்
வகையாய் இருக்குதம்மா

இப்பாடலை எழுதியவர்/ பாடியவர் டாக்டர். கே.ஏ.குணசேகரன் அவர்கள்.    இப்பாடலிலுள்ள சோக வரிகளை  அதாவது
"ஏழைக் குருவியென ஏங்கியழக் கூடாது"
என்கிற எழுச்சி வரிகளை எழுதியவர், தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்கள்.

இப்பாடலை கே.ஏ.குணசேகரன் அவர்கள் அவரது வெண்கலக் குரலால் கலை இலக்கிய / மக்கள் இரவு மேடைகள், இடதுசாரி மேடைகளில் பாடி மக்களை எழுச்சியூட்டினார்.

இப்பாடல் ஒரு காலக்கட்டத்தோடு தேக்கநிலையடைய இப்பாடலைப் பட்டித் தொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தவர்  நாட்டுக்கலைச் செம்மல் திரு. ஆக்காட்டி ஆறுமுகம் அவர்கள். இவர் புதுக்கோட்டை திருமயம் பாப்பாவயல்   எனும் கிராமத்தில் பிறந்தவர். ஆக்காட்டி எனும் சிறுபறவையைக் கடல் கடந்து கொண்டுபோய் சேர்த்ததால் அந்தமான் தமிழ்ச்சங்கம் இவருக்கு 'ஆக்காட்டி' எனும் பட்டம் வழங்கியது. இப்பட்டம் இவரது பெயருக்கும் முன்னே சிறப்புப் பெயராக அமைந்தது.

மேலும் இவர்  தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, நாட்டுப்புற நல்லிசை வாணர், பாட்டிசைப் பாவலர் ஆகிய விருதுகள் பெற்றவர்.











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா

புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி!