ஓட்டுக்கேட்டு வந்தாங்களே சின்னாத்தா

புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்கள் - 01

காரு போட்டு ஓடி வந்து கையெடுத்து சலாம் போட்டு
அக்கான்னு தங்கச்சின்னு அவசரமா ஒறவு சொல்லி
ஓட்டு கேட்க வந்தாங்களே சின்னாத்தா- இப்போ
ஒருத்தனையுங் காணலியே செல்லாத்தா.

சாதி நம்ம  சாதியின்னா தாயே சரணமின்னா
ஒங்க வீட்டுப் புள்ளேயின்னா ஓட்டுப் போட வேணுமின்னா
ஓட்டு போட்ட கையோட சின்னாத்தா- இப்ப
ஒருத்தனையுங் காணலியே செல்லாத்தா

வீதியெல்லாம் தோரணங்க வெதவெதமாக் கொடியைக் கட்டி
சாலையெல்லாம் தூள் பறக்க சரஞ்சரமாய் ப்ளசர் விட்டு
ஓட்டுக் கேட்க வந்தாங்களே சின்னாத்தா- இப்போ
ஒருத்தனையுங் காணலியே செல்லாத்தா

மல்லவட்டுத் துண்டு போட்டு மைக்கு வச்சு விளம்பரங்க
வாழ்வு மலருமின்னா வறுமை தொலையுமின்னா
போடுங்கம்மா ஓட்டுஇன்னா பொடலங்காயைப் பார்த்துஇன்னா  ( ஓட்டுக்கேட்டு வந்தாங்களே)


ஏழை எளியதுக எல்லாருக்கும் நன்மை இன்னா
வேலை கெடைக்குமின்னா விலைவாசி குறையுமின்னா
சாலை தெரு வெளக்கு சர்காரு வசதிஇன்னா
போட்ட வெளக்குக் கூட சின்னாத்தா-இப்ப பொசுக்குன்னு நின்னுபோச்சே செல்லாத்தா

தாலிக்குத் தங்கந்தாரேந் தாளிக்க வெங்காயந்தாரே(ன்)
கூலிக்கு வேலை தாரேங் கூப்பிட்டாக்க ஓடியாரே(ன்)
ஆச்சிக்கே வந்துட்டாக்க அத்தனையுஞ் செஞ்சு தாரே(ன்)
( ஓட்டுப்போட வேணுமின்னா)

மானம் மழை பெய்ய வில்லே வயக்காடும் வெளையவில்லை
கையிலே காசுமில்லே கடங்கொடுக்க யாருமில்லே
கையைக் கழுவக்கூட சின்னாத்தா- இப்போ
கொளத்திலேயும் தண்ணியில்லே செல்லாத்தா

குடிக்க இப்போ கூழுமில்லே குடிசையிலே வெளக்குமில்லே
கோதுமைக்கும் மண்ணெண்ணைக்கும் கூட்டம் குறையவில்லே
அங்காடிக் கார்டுக்கு அரிசி கெடைக்கவில்லை
எறகு மொளச்ச வெலை இன்னு எறங்க வில்லே
(ஓட்டுக்கேட்டு வந்தாங்களே)

இப்பாடலை எழுதிப் பாடியவர் புலவர் அ.வெ.சுந்தரபாரதி.

இவரைப் பற்றிய சிறுகுறிப்பு

இயற்பெயர் அ.வெ.அழகுசுந்தரம், குளமங்கலம், ஆலங்குடி. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மேனாள் மாவட்டத் துணைத் தலைவர். கவிஞர், பாடகர், கவியரங்க நடுவர். மேடைகளைப் பாட்டுகளால் அலங்கரித்த மக்களிசை பாட்டுக்காரர்.

இப்பாடல் அவரது கவியருவி எனும் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. மேலும் இப்பாடல் கே.ஏ.குணசேகரன் தொகுத்த அக்னி ஸ்வரங்கள் எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் களவாணி-2 திரைப்படத்தில் திரைப்பாடலாக இடம்பெற்றது. 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா

ஆக்காட்டி ஆக்காட்டி -நீ

புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி!